பொருளாதாரத்திலும், வெளியுறவுக் கொள்கைகளிலும் ஆளும் அரசுக்கு கவனம் இல்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். வீடியோ வெளியிட்டு பிரசாரம் செய்த மன்மோகன் சிங், அரசியல் லாபத்துக்காகவோ, உண்மையை மறைக்கவோ காங்கிரஸ் ஒருபோதும் நாட்டைப் பிரிக்கவில்லை.
ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு, தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே இன்னும் குற்றம் சாட்டி வருகிறது.
இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள்.
நான் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, எனது பணி மூலம் பேசினேன். உலகத்தின் முன் தேசத்தின் மதிப்பை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் சீர்குலைக்கவில்லை. நான் பலவீனமானவன், அமைதியானவன், ஊழல்வாதி என பொய்யாக குற்றச்சாட்டிய பிறகு, பாஜகவும் அதன் பி மற்றும் சி அணியும் நாட்டின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் எனக்கு திருப்தியாவது உள்ளது.
அவர்களுக்கு (பாஜக தலைமையிலான அரசு) பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை. இப்பிரச்சினை நாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. வெளியுறவுக் கொள்கைகளிலும் ஆளும் அரசுக்கு கவனம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.