உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலைமையே தற்போது வரை நீடிப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை ரஷியா நிறுத்தியிருப்பது தொடர்ந்து அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக வரும் 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்க ஏர் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப ஏதுவாக 3 விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த விமானத்திற்கான டிக்கெட்டை ஏர் இந்தியா புக்கிங் அலுவலகங்கள் மற்றும் இணையதளம், அங்கீகரிக்கப்பட்ட பயண ஏஜெண்ட்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.