நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காரின் இன்சூரன்ஸ் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்.19 அன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வந்தார். விஜய்யை பார்க்க வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் கூடியது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அன்றைய தினம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
தனது வாக்கை செலுத்திய விஜய், ஒரு சிவப்பு நிற மாருதி செலிரியோ காரில் திரும்பிச் சென்றார். விஜய் காரில் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வந்தன. அந்தப் புகைப்படங்களிலிருந்து காரின் பதிவு எண்களை எடுத்த சிலர், அதனை வைத்து அந்தக் காருக்கான இன்சூரன்ஸ் 2020-ஆம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது எனவும், 2021-ஆம் ஆண்டுக்கான ஓர் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது எனவும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இந்தத் தகவல் இணையத்தில் தீயாய் பரவியது.
இந்நிலையில், தற்போது விஜய் தரப்பிலிருந்து, அந்தக் காருக்கு இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இன்சூரன்ஸ் நகலை விஜய் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விஜய் கார் தொடர்பான சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.