உக்ரைன் விவகாரத்தில் உலகம் தற்போது அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக ஐ.நா. தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா அங்கீகரித்தது.
இதனை தொடர்ந்து டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களுக்கு ரஷியா தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. அந்த படைகள் உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் நகரங்களின் எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ரஷியாவுக்கு வெளியே படைகளை பயன்படுத்தவும் ரஷிய நாடாளுமன்றம் அதிபர் புதினுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இதனால், உக்ரைன் அரசுப்படைகள் மீது ரஷியா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் உலகம் அமைதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளதாக ஐ.நா. தலைவர் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடபாக அவர் கூறுகையில், உலகம் சமீபத்திய ஆண்டுகளில் சந்திக்கும் மிகப்பெரிய அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தல் இதுவாகும். உக்ரைனுக்குள் ரஷிய அதிபர் புதின் படைகளை அனுப்பியது உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறும் செயலாகும். இது மின்ஸ்க் ஒப்பந்தத்திற்கு மரண அடையாக இருக்கும்’ என்றார்.