உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இதையடுத்து ரஷியா துவக்கிய தாக்குதல் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா கூறியதாவது, “உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கி உள்ளது. அமைதியாக இருந்த உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உலக நாடுகள் இதில் தலையிட்டு உடனடியாக புதினை தடுத்து நிறுத்த வேண்டும். உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்.
பேரழிவு ஏற்படுத்தும் நடவடிக்கையை ரஷியா துவக்கி உள்ளது. உக்ரைன் தன்னை தற்காத்துக் கொண்டு வெற்றி பெறும். தற்போது ரஷியா, அனைத்து வகையிலும் தனித்து விடப்பட்டுள்ளது. உலகம் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.