யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேகநபர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான பொலிஸார் கடந்த கிழமை நோர்தாம்ப்டன்ஷயாரில் உள்ள அவரின் வீட்டில் வைத்து, அவரைக்கைது செய்ததாக பெருநகர பொலிஸின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதான சந்தேகநபர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் பிரிவு 51கீழ், குற்றங்கள் புரிந்தாரென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைச் சம்பவத்துடன் இந்நபர் தொடர்புடையவர். இந்த நடவடிக்கை குறித்து நிமலராஜனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவளித்து வருகின்றனர். விசாரணைகள் தொடர்கின்றன.
விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைப் பெறுவதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை சமூகத்தவர்களிமிருந்து, இத்தகவலை எதிர்பார்ப்பதாக பெருநகர பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பான தளபதி றிச்சர்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.