தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த சங்கத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் தற்போது 1907 பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கிறது.
தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நேற்று தேர்தல் நடந்தது. வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.
தலைவர் பதவிக்கு பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள்.
இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கி மாலையில் முடிந்தது. பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இதில் ஆ.கே.செல்வமணி 955 ஓட்டுகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்றார்.