அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
‘வலிமை’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளது. மார்ச் 9-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
அவ்வப்போது அஜித் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகும். ஆனால் அஜித் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதால் அவருடைய மேலாளர் தரப்பிலிருந்து அதற்கான விளக்கங்கள் அளிக்கப்படும்.
சமீபத்தில் ‘அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார் என்றே நினைக்கின்றேன்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ‘வலிமை’ வெளியிட்டது என்று பல்வேறு விஷயங்கள் அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார் பூங்குன்றன்.
இந்தப் பதிவு பரவலாகப் பேசப்பட்டது. இது குறித்து அஜித்தின் தரப்பிலிருந்து ட்விட்டர் பதிவில், “அஜித் குமாருக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அதுகுறித்து தவறான தகவல்கள் பரவுவதை ஊடகத்தினர் ஊக்கப்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பதிவின் மூலம் அஜித்தின் அரசியல் வருகை குறித்த பூங்குன்றன் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.