உக்ரைன் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு ரஷியாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க மறுத்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நேட்டோ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இந்திய அரசு ரஷியாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க மறுத்து வருகிறது.
இது குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டெனால்டு லூ பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு ஒற்றுமையுடன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்காவின் மிகவும் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியா உள்ளது. அந்த கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம். ரஷியாவின் நடவடிக்கைகளால் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடம் இருந்து மேலும் தூர விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இந்தியா புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.