மனித உரிமையில் தோற்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் எழுத்துபூர்வமான புதிய தகவல் தொடர்பான உள்ளக உரையாடலில், நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு பெரும் ஆதரவு கிடைத்ததுடன், புறநிலை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியன பலதரப்பு ஈடுபாட்டிற்கான முக்கிய அடிப்படையாக மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

உள்ளக கலந்துரையாடலில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளன. தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, மற்றும் ஆபிரிக்காவின் பல அரசுகளிடமிருந்து இலங்கைக்கான ஆதரவு வெளிப்படுத்தப்பட்டது. சவுதி அரேபியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், கென்யா, எத்தியோப்பியா, மாலைதீவு, சீனா, கியூபா, ஜப்பான், சிரிய அரபுக் குடியரசு, வியட்நாம், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, வெனிசுவேலா, நைஜீரியா, பாகிஸ்தான், கம்போடியா, ரஷ்யக் கூட்டமைப்பு, லெபனான், உகாண்டா, பெலாரஸ், சிம்பாப்வே, எரித்திரியா, தெற்கு சூடான், லாவோ ஜனநாயக மக்கள் குடியரசு, யெமன், ஈரான், நைஜர், கசகஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அசர்பைஜான் ஆகியன இலங்கைக்கு ஆதரவாக பேசிய 31 நாடுகளாகும்.

சட்டச் சீர்திருத்தங்கள் உட்பட தேசிய செயன்முறைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் கோவிட்-19 தொடர்பான சவால்களைப் பொருட்படுத்தாமல் இந்த விடயத்தில் இலங்கை அடைந்து கொண்டுள்ள முன்னேற்றம் ஆகியவற்றை உலகளாவிய தெற்கின் அரசுகள் பாராட்டின.

தன்னார்வ தேசிய செயன்முறைகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகம், பாரபட்சமற்ற தன்மை, தேர்ந்தெடுக்காத தன்மை மற்றும் அரசியல்மயமாக்காமை போன்ற அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்தின.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 04) இடம்பெற்ற ஊடாடும் உரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மனித உரிமைகள் தொடர்பான தன்னார்வ சர்வதேச முயற்சிகளைத் தொடர்வதற்கும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் ஈடுபடுவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய அதே வேளையில், உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட புதிய தகவலில் காணப்படுகின்ற கடுமையான முரண்பாடுகள் மற்றும் பலவீனங்கள் தொடர்பில் குறிப்பிட்டார்.

Related posts