முதல் பார்வை | ‘எதற்கும் துணிந்தவன்’

வக்கிர எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் சூறையாடப்படும் பெண்களை எந்த எல்லைக்கும் சென்று மீட்பதே ‘எதற்கும் துணிந்தவன்’.
உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் முக்கியப் புள்ளி போர்வையில் வலம்வரும் வினய் தனது இச்சைக்காக ஒரு கேங்கை ஏற்படுத்தி, பல தவறான செயல்களைச் செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அவர்களின் தவறுகளைக் கண்டுபிடிக்கும் சூர்யா, தனக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மத்தியில் எப்படி வில்லனின் நிஜ முகத்தை தோலுரித்துக் காண்பிக்கிறார், அதற்காக எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறார், அந்த கேங்கை என்ன செய்கிறார், இதற்கு அவர்களின் குடும்பம் எப்படி உதவுகிறது, பாதிக்கிறது என்பதுதான் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் திரைக்கதை. ‘காப்பான்’ படத்துக்கு பிறகு வெளியான ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ என இரண்டு படங்களும் ஓடிடி மெட்டீரியலாக சூர்யாவை வேறு கோணத்தில் காண்பித்தன. இவற்றில் கதையின் நாயகனாக நடித்த சூர்யா, கிட்டத்தட்ட 900+ நாட்களுக்கு மேலாக பெரிய திரையில் தன்னை கொண்டாட முடியாத ரசிகர்களுக்காக ‘கதாநாயகனாக’ பக்கா கமர்ஷியல் மெட்டீரியலாக இறங்கி அடிக்க முடிவுசெய்து ‘எதற்கும் துணிந்தவன்’ கதையை ஓகே செய்துள்ளார் போல.
வழக்கறிஞர் கண்ணபிரானாக வரும் சூர்யா, காமெடி, நடனம், எமோஷன், ஆக்சன் என தனது என்ட்ரி சீனில் இருந்து க்ளைமாக்ஸ் வரை வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை தன் வசப்படுத்துகிறார். இடைவேளையை நெருங்கும்போது வரும் ஆக்‌ஷன் காட்சிகள், முதல் பாதியில் காதலி, பெற்றோருடன் அடிக்கும் லூட்டி என திரையரங்கம் அதிரும்படி ‘அயன்’ சூர்யாவை நியாபகப்படுத்தியுள்ளார். இடைவேளைக்கு முன்பாக வரும் சண்டை காட்சியில் ‘நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற, வேட்டிய கட்டுனா, நான்தான்டா ஜட்ஜ்’ என்பதெல்லாம் சூர்யா தனது ரசிகர்களுக்காவே செய்த பக்கா தியேட்டர் மொமன்ட் ஆக உள்ளது.
சூர்யாவின் காதலியாக பிரியங்கா மோகன். சூர்யாவை காதலிக்கும் காட்சிகளில் பிரியங்கா காண்பிக்கும் கியூட்னஸ், தான் சந்திக்கும் பிரச்சினையை எதிர்க்க துணிவதில் வெளிப்படுத்தும் தைரியம், இரண்டாம் பாதியில் எமோஷன், சென்ஸ்டிவ் விஷயம் என தனக்கு கிடைத்த வாய்ப்பில் அளவான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் ஒட்டிக்கொள்கிறார். டாக்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் தனது வரவை அழுத்தமாக பதித்துள்ளார்.
கிராமத்தில் இருக்கும் ஸ்டைலிஷ் வில்லனாக வினய். வில்லத்தனம் காண்பித்து அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளில் கூட அதிக மெனக்கெடல் இல்லாத நடிப்பு. பாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரின் ஒரே முகபாவனையால் டாக்டர் படத்தின் தொடர்ச்சி போல் என உணர வைக்கிறது. அவரின் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம், தமிழ் சினிமாவின் வழக்கமான வில்லனாகவே பதிகிறது. கதையின் தேவைக்கேற்ப இன்னும் கொஞ்சம் கூடுதல் வில்லத்தனத்துடன் அவரை காண்பித்திருக்கலாம். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி என தேர்ந்த நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
படத்துக்கு பலமாக பின்னணி இசை இருந்தாலும், ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களை இமான் முணுமுணுக்க வைக்கத் தவறவைத்துள்ளார். ‘சும்மா சுர்ருன்னு’ கமர்ஷியல் சினிமாவுக்கேத்த மீட்டர் பாடலாக திரையில் கலர்ஃபுல் காண்பிக்கிறது. மற்றபடி ரத்னவேலுவின் ஒளிப்பதிவு , ரூபனின் எடிட்டிங் என தொழில்நுட்ப விஷயங்கள், நடனம் கச்சிதம் சேர்த்துள்ளன.முதல் காட்சியே, அடுத்தடுத்து கொலை என தொடங்கும் படம், கிராமங்கள், அதன் வழக்கங்கள், உறவுகள், விழாக்கள் அதன் முன்கதை என ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ பாணியில் பாண்டிராஜின் வழக்கமான டச் உடன் விரிகிறது. முதல் பாதியில் காதல், காமெடி உடன் படத்தின் மையக்கருத்தை நோக்கி விரிகிறது. இவை ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்டாலும், கதையுடன் சேர்ந்த காமெடியுடன் ஊடாக முதல் பாதியை கடத்த முயன்றுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். முதல் பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும், இடைவேளைக்கு முன்பாக படம் விறுவிறுப்பை எட்டுகிறது. ஆனால், இரண்டாம் பாதியில்தான் அந்த விறுவிறுப்பை தக்கவைப்பதில் சறுக்கியுள்ளார். இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே ஒருபுறம் சீரியஸான சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இடையில் வரும் காமெடி விறுவிறுப்புக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
திரைக்கதையில் சூர்யா – பிரியங்காவின் கெமிஸ்ட்ரி, காமெடி உள்ளிட்டவைகளுக்காக மெனக்கட்டிருக்கும் அவர், அதே மெனக்கெடலை தான் சொல்ல வந்த விஷயத்திலும் செலுத்தியுள்ளார். ஆனால், சரண்யா பொன்வண்ணன் பாத்திரத்தின் ஓவர் டோஸ், சூரியின் வழக்கமான காமெடி, திரைக்கதையின் தொய்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வக்கிர எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் தமிழ் சமூகத்தில் சில ஆண்டுகள் முன் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மக்களுக்கு கொண்டுசெல்ல தனது வழக்கமான பாணியுடன் முயன்றுள்ளார் பாண்டிராஜ். இதில், பெண்கள், அவர்களின் உடல் சார்ந்த வசனங்கள் சமகாலத்தில் நடந்து வரும் சம்பவத்துக்கு மத்தியில் கவனம் பெறுகின்றன.மொத்தத்தில், பாண்டிராஜின் வழக்கமான டச் உடன், சூர்யாவின் மாஸ் + கமர்ஷியல் நடிப்பில் ‘ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு’ ஏற்ற சினிமாவாக, அதில் சமூக கருத்தையும் சேர்த்து கொடுத்திருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ குடும்பங்களை கவரத் தவறாது.
‘ஜெய் பீம்’ இதேபோன்று ஒரு சமூக பிரச்சனையை சட்டரீதியாக விவாத்திருக்கும். ’க்ளாஸ்’ திரைப்படமாக கொண்டாடப்பட்ட ‘ஜெய் பீம்’ படைப்பை இந்தப் படத்தோடு ஒப்பிடுவது என்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாத ஒன்றே. ஏனென்றால், ’எதற்கும் துணிந்தவன்’ முழுமுழுக்க கமர்ஷியல் அம்சம் கொண்ட திரைப்படம். அதேநேரம், இரண்டு படத்திலும் பேசப்பட்டுள்ள விஷயங்கள், சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சமூகத்தில் பெரியது. எதற்கும் துணிந்தவனில், குற்றங்களை இந்தச் சமூகம் கையாளும் விதத்தை உணர்வு என்கிற ரீதியில் காட்டியிருக்கிற விதம் பிற்போக்குத்தனத்தை விதைக்கும் விதமாக உள்ளது. இதுபோன்ற சென்ஸ்டிவ் ஆன விஷயங்களில் விதைக்கப்படும் பிற்போக்குதன்மை சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படுத்தும் என்பதை படக்குழு உணர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

Related posts