தேசிய பொருளாதார பேரவைக்கு ஆலோசனை வழங்க 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான 11 பேர் கொண்ட தேசிய பொருளாதார பேரவைக்கு உதவும் வகையில் ஜனாதிபதியினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூடத்தின் முடிவுகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்றையதினம் (15) இடம்பெற்றபோது, அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.
குறித்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
குறித்த குழுவின் உறுப்பினர்கள் வருமாறு,1. பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன
2. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
3. கலாநிதி துஷ்னி வீரகோன்
4. தம்மிக பெரேரா
5. கிரிஷான் பாலேந்திர
6. அஷ்ரப் உமர்
7. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
8. விஷ் கோவிந்தசாமி
9. எஸ்.ரங்கநாதன்
10. ரஞ்சித் பேஜ்
11. சுரேஷ் டி மெல்
12. பிரபாத் சுபசிங்க
13. துமிந்த ஹுலங்கமுவ
14. சுஜீவ முதலிகே
கடந்த வாரம் (07) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 11 பேர் கொண்ட தேசிய பொருளாதாரப் பேரவை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் “தேசிய பொருளாதார பேரவை” வாராந்தம் கூடுவதற்கு இதன்போது ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
குறித்த பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.