விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு எழுந்துள்ள பெரும் ஆதரவுக்கு இடையே எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியுள்ளன.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
வரி விலக்கு: காஷ்மீர் பண்டிட்களின் துயரத்தை கூறும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு பாஜக ஆளும் ஹரியாணா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு எழும் ஆதரவுக்கு மத்தியில் எதிர்ப்புக் குரல்களும் எழத் தொடங்கியுள்ளன. இப்படம் இஸ்லாமிய வெறுப்பை சாமானிய மக்களிடத்தில் ஏற்படுத்தும் விதமகாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, காஷ்மீர் பண்டிட்களுக்கு என்ன செய்தது என்றும் ட்விட்டரில் சில விமர்சனங்களை கவனிக்க முடிந்தது.
மேலும். இந்தத் திரைப்படம் வெளியான திரையரங்களில் சிலர், ’தேச விரோதிகள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்’ என்று கோஷம் எழுப்பியதாக வீடியோவும் பகிரப்பட்டு, அதுகுறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் பதிந்த ட்வீட்டில், “இப்படம் எதையெதைச் சொன்னதோ, அதை அப்படியே செய்து கொண்டிருக்கிறது. முற்றிலும் திகிலூட்டும் காட்சிகள் திரையரங்குகளில் வெளிவருகின்றன. கொலைவெறி கோஷங்கள், வெறுக்கத்தக்க முழக்கங்கள், முஸ்லிம்களிடமிருந்து விலகி இருக்கும்படியான குரல்கள் அங்கே எழுப்பப்பட்டு வருகிறது” என்று என்று பதிவிட்டுள்ளார்.