நிதியமைச்சர் பசில் ராஜபக் ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (16) டில்லியில் சந்தித்தார். இதன்போது, இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக புது டில்லியில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா மற்றும் மீன்வளம் குறித்து இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவது மற்றும் அத்துறைக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர், கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் சற்று முன்னர் கைச்சாத்திட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது