இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா இன்று (20) காலை பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயசந்திரனின் மேற்பார்வையின் கீழ் மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக மகளிர் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெரும் பாதிப்பை சந்தித்திருப்பவர்கள் பெண்களே. அவர்கள் ஏற்கனவே குடும்ப தலைவிகளாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த பொருளாதார பின்னடைவு காரணமாக பெரும் பாதிப்பை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள்.
பெண்களுடைய பால் நிலை சமத்துவத்தை நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று அந்த சமத்துவம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
இன்று இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றார்கள். குறிப்பாக எங்களுடைய மலையக பெண்களின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்புகின்றவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது.
வெறுமனே சர்வதேச தினத்தில் பெண்களை கொண்டாடுவதால் மாத்திரம் பெண்களின் உரிமைகளை பெற்று விட முடியாது. அரசியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. ஆனால் அது உள்ளுராட்சி தேர்தல்களில் மாத்திரமே அது நடைமுறையில் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அந்த நிலை இல்லை.அதனை கொண்டுவர வேண்டும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக மலையக மக்கள் முன்னணின் உறுப்பினர் ஒருவர் வெற்றி பெறுவார். அதற்கான முழு ஒத்துழைப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.