போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபா கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (CoPE குழுவில்) அம்பலமாகியுள்ளது.
கடன் பெற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் இன்னமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குழுவிற்கு சமுகமளித்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக இது தொடர்பில் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இதனுடன் தொடர்புபட்ட வெளிநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த கடனை மீள வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2017 மற்றும் 2018 நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் நேற்று (23) கூடியபோதே இவ்விடயங்கள் வெளிக்கொணரப்பட்டன.