நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. எதுவும் மாறப்போவதில்லை.
வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது. பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது. அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.
நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.