அரசியலுக்கு வர முடிவா? தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டைரக்டர் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு நடிகர் விஜய் அளித்த பேட்டியில் கூறியதாவது-
நடிகர் விஜய் உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்களை போட்டியிட வைத்ததன் மூலம் அரசியலுக்கு வருவாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்களும் அரசியலுக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தொலைக்காட்சிக்கு விஜய் தற்போது அளித்துள்ள பேட்டியில், “தளபதி விஜய்யாக இருக்கும் நீங்கள் எப்போது தலைவன் ஆவீர்கள்? தலைவனாகும் விருப்பம் உள்ளதா? உங்கள் ரசிகர்கள் அரசியல் ரீதியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்களே’’ என்றெல்லாம் டைரக்டர் நெல்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து விஜய் கூறும்போது, ‘‘கடந்த 30 வருடத்தில், சாதாரண நடிகனாக இருந்த என்னை படிப்படியாக வளர்த்து தளபதியாக்கியது எனது ரசிகர்கள்தான். அந்த தளபதியை தலைவனாக்கி பார்க்க வேண்டுமா? இல்லையா என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதோடு சூழ்நிலையும் முடிவு செய்யும். என்னை கேட்டால் எனக்கு விஜய்யாக இருப்பதுதான் பிடித்து இருக்கிறது. ஆனாலும் ரசிகர்களும், சூழ்நிலையும் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்றால் மாறித்தான் ஆக வேண்டும்.
பீஸ்ட் விஜய்யாக மாற வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜய்யாகவே இருக்க வேண்டுமா என்பதை சூழ்நிலைதான் முடிவு செய்யும். ரசிகர்களில் சிலர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், அதற்காக அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றும் ஆசைப்பட்டனர். அந்த ஆசைக்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை.
எனவேதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும், அதற்காக எனது புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கேட்டதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். அதை பயன்படுத்தி நிறைய பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயித்தவர்கள் நேர்மையாக பணியாற்றுகின்றனர்’’ என்றார்.