இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய சலுகை கடன் வசதியின் கீழ், இலங்கை வந்தடைந்த குறித்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி, கொழும்பு துறைமுகத்தில் வைத்து உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளால் இலங்கை அதிகாரிகளிடம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இன்று (12) இலங்கை வந்தடைந்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளால் சம்பிரதாயபூர்வமாக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.
இன்றையதினம் வந்தடைந்த அரிசிக்கு மேலதிகமாக, குறித்த கடன் வசதியின் கீழ் கடந்த சில தினங்களுக்குள் 5,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கையை வந்தடைந்துள்தாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இதன் மூலம் இந்தியாவின், அரசாங்க வர்த்தகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் இதுவரை மொத்தமாக 16,000 மெட்ரிக் தொன் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 17ஆம் திகதி இலங்கை அரசுக்கும் இந்தியாவின், அரச வங்கிக்கும் (SBI) இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
குறித்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் அரிசி விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விநியோகமானது கடந்த சில மாதங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட பல்வகை ஆதரவின் ஒரு பகுதியாகும். இதில், உரிய நேரத்தில் எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி ஆதரவு ஆகியன உள்ளடங்குகின்றன.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக, இலங்கையின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்பாக எட்டப்பட்ட புரிந்துணர்வுகளுக்கு இணங்க இந்த விரைவான விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கடந்த மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட வெற்றிகரமான விஜயத்தை அடுத்து, இலங்கை மக்களுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.