நடிகர் விஜய்யின் 65-வது படமானபீஸ்ட் இன்று வெளியானது. சென்னை, மதுரை ,கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலைக் காட்சி திரையிடப்பட்டதால் இரவு முதலே திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவியத் தொடங்கினர்
திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியானதையொட்டி பட்டாசுகள் வெடித்து, ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகக் குரல் எழுப்பினர். கோவை, நாமக்கல், கோவில்பட்டியில் பல மணி நேரமாகக் காத்திருந்த ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் எப்போதும் போல விஜய் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அரபிக் குத்து பாடலில் அவரது நடன அசைவு கண்களுக்கு விருந்தாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்கள் படத்தை தியேட்டர்களில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சினிமா படங்களை டவுன்லோட் செய்ய வைக்கும் இணையதளங்கள் மூலம் படம் ஆன்லைனில் கசிந்துள்ளது. படம் ரிலீசாகி முழுசாக 3 ஷோ முடிவதற்குள் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டது.
இதுபோன்ற பைரசியால் பாதிக்கப்பட்ட முதல் தென் இந்திய திரைப்படம் பீஸ்ட் மட்டும் அல்ல. கடந்த சில மாதங்களில், ஆர்ஆர்ஆர், ராதே ஷியாம், வலிமை போன்ற பல தென்னிந்திய படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த இணையதளங்களில் ஆன்லைனில் கசிந்தன.
படம் ஆன் லைனில் கசிந்ததால் விஜய்யின் ரசிகர்கள் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளனர், மேலும் படத்தை ஆன்லைனில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்குமாறு சமூக ஊடகங்களில் மக்களை வற்புறுத்தி வருகின்றனர். பைரசி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் பாதிக்கிறது.
பீஸ்ட் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் டுவிட்டரில் #BlockBusterBEAST, #VeeraRaghavan, #பீஸ்ட் ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. இதில் மீம்கள் போட்டு சிலர் பீஸ்ட் படத்தை கலாய்த்து வந்தாலும், பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்து வருகிறது. பீஸ்ட் படத்திற்கு ஆதரவான கமெண்ட்கள், ரசிகர்களின் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.