அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகும்

புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகும்.

மேலும், இந்த சூழ்நிலைக்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பிழையான பொருளாதார கொள்கையாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று (14) நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எதிர்கட்சிகள் கூறிய விடயங்களை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்பட்டமையே.

நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினோம்.

மீள் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்துவதை நிறுத்தி சம்மந்தப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் இந்த எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளாத அரசாங்கமும், அதிகாரிகளும் செயல்பட்டதன் காரணமாக அதன் விளைவை இன்று மக்கள் எதிர்நோக்கியிருக்கார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மத்திய வங்கி ஆளுநர்களாக செயல்ப்பட்டவர்கள் முழுக்க முழுக்க நூறு வீதம் அரசியல் மயப்பட்டு செயல்பட்டார்கள். அவர்கள் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க தவறிவிட்டார்கள். ஒரு நாட்டில் ஜனநாயக செயல்பாடு என்பது பாராளுமன்றம் நீதிதுறை என்பன முக்கியத்துவம் பெறுவது போல மத்திய வங்கியும் சுயாதீனமாக செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு. ஆனால் அதை அரசியல் மயமாக்கியதன் காரணமாக இன்று இந்த பொருளாதார பின்னடைவை நாம் சந்தித்திருக்கின்றோம்.

அளவுக்கு அதிகமாக பணம் அச்சிடப்பட்டதால் இன்று எங்களுடைய ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகின்றது. எனவே இன்றைய மோசமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சுதநிதிரமாகவும் சுயாதீமாகவும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர் திறமையான சிறந்த அனுபவத்தை கொண்ட ஒருவர். எனவு அவருடைய கருத்துகளை செவிமடுத்து முன்னோக்கி சென்றால் மாத்திரமே எங்களுடைய இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

எதிர்வரும் காலத்தில் இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடியவர் மதத்தையும் முன்நிலைப்படுத்தாது மக்களை முன்நிலைப்படுத்தி செயல்படுகின்ற ஒருவராக இருக்க வேண்டும்.

Related posts