இந்தியாவின் கடன் திட்டத்தை மேலும் தொடர்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதேவேளை கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கும் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பல்வேறு நாடுகளினதும் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியிடம் நாம் பல்வேறு தரப்பட்ட நிதியுதவிகளை கோரியுள்ளோம். அதன்படி முதல்கட்டமாக பத்து மில்லியன் டொலரை அவசரத் தேவைக்காக பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்துக்கு நாம் அதனைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம். அதன் மூலம் நாம் தற்போது நாட்டுக்குத் தேவையான அவசர மருந்துகளைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம்.
அதேவேளை விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இரசாயன உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மேலும் 500 மில்லியன் டொலர்களை கோரியுள்ளோம்.
அதேபோன்று வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு சில மாதங்களுக்கு மாதாந்தம் ஒரு தொகை நிதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் மக்கள் எதிர்நோக்கும் சமையல் எரிவாயு பிரச்சினை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
பிரச்சினைகள் கிடையாதெனக் கூறி நாம் மக்களை ஏமாற்ற மாட்டோம். தற்போதைய நெருக்கடிகளுக்கு நிவர்த்தி காண்பதற்காக இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளும் கடன்களை தொடர்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அந்த நிதியை நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த உள்ளோமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.