ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது “ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்றுதான் சிங்கள மக்கள் அதைச் சொல்கின்றனர். இது எமக்குச் சிரிப்பாக இருக்கின்றது.
யார் இந்தப் போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் இளைஞர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் இங்கே இடம்பெற்ற போரைக் காட்டி கடன் வாங்கினார்கள். இப்போதும் நாட்டைக் காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம். எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால், இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.
நாம் ஒரு தசாப்தமாக மின்சாரம் இல்லாமல், எரிபொருள் இல்லாமல் இருந்தோம். எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். அன்று எமக்காக யாரும் வரவில்லையே என்று இப்போது தமிழ் மக்கள் சிந்திக்கின்றனர். அதற்காக நாம் அப்படியே இருக்கமாட்டோம். சிங்கள மக்கள் அன்று செய்த தவறைச் செய்ய மாட்டோம். உள் மனதிலே உறுத்தல் இருந்தாலும், இன்றைய உங்களின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு கொடுப்போம்.
இதே காலிமுகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீகப் போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அன்றும் நாம் சமத்துவத்துக்காகப் போராடினோம். ஆகவே, உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம்.
தம்பி போனால் அண்ணன் ஆட்சிப்பீடம் ஏறுவார் என்ற பயம் வேண்டாம். இரண்டு தடவை அவர் ஜனாதிபதியாக இருந்து விட்டார். ஆகவே, நாடாளுமன்றம் அதை முடிவு செய்யும். நிலையான அரசு இப்போது அவசியம். அதற்குப் பல முயற்சிகள் நடைபெறுகின்றன என்றார்.