ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு பல முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு பல்வேறு தரப்பிடம் விசாரனை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இன்று முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் விசாரணை நடைபெற்றது. இதன் மூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரை 159 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணிகளை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை ஜூன் 24-ம் தேதிக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யும் அறிக்கையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உள்ள மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.