பிரபல நடிகை லட்சுமி, கர்நாடக அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் கர்நாடக அரசு சார்பில் 2017-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவும், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு திரைப்பட விருதுகளை வழங்கினார்.
விழாவில் பிரபல பழம்பெரும் தமிழ் நடிகை லட்சுமிக்கு நடிகர் ராஜ்குமார் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருதை பசவராஜ் பொம்மை வழங்கினார். இதுபோல் பிரபல இயக்குனர் நாராயணனுக்கு புட்டன்னா பெயரிலான விருதும், மறைந்த தயாரிப்பாளர் லட்சுமி பதிக்கு விஷ்ணுவர்தன் பெயரிலான விருதும் வழங்கப்பட்டன.
நடிகை லட்சுமி விழாவில் பேசும்போது, ‘`டாக்டர் ராஜ்குமார் பெயரில் கிடைத்துள்ள விருது கவுரவத்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்’’ என்றார்.
விழாவில் பசவராஜ் பொம்மை பேசும்போது, மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும். தற்போதைய பட்ஜெட்டில், 125 கன்னடம் மற்றும் பிராந்திய படங்களுக்கு பதிலாக, 200 படங்களுக்கு மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.