“இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உப குழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன். அப்போது இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நின்று விடும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம், நேற்றிரவு இருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் போது, கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,
நேற்றிரவு தொலைபேசியில். சபாநாயகர் மஹிந்த யாபாவிடம் பேசி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு, “20ம் திருத்தத்தை அகற்றிவிட்டு, 19ம் திருத்தத்தை கொண்டு வருவதாக சொன்னீர்கள். அமைச்சரவையிலும் அனுமதி பெற்றதாகவும் சொன்னீர்கள். ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் நாம் அரசியலமைப்பு திருத்த வரைபை வழங்கியுள்ளோம். அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முழுமையாக அகற்றுவது பற்றி கூறப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் வரைபுக்கே முதலிடம் கிடைக்கும். 20ம் திருத்தத்தை அகற்றும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் ஆதரவளிப்போம். முதற்கட்டமாக, 20ஐ அகற்றிவிட்டு, 19ஐ கொண்டு வருவதையும் நாம் ஆதரிப்போம். ஆகவே நீங்கள் எப்போது உங்கள் சட்ட வரைபை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? இது பற்றி சற்றுமுன் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் பேசினேன். உங்கள் சட்ட வரைபு எப்போது சபைக்கு வரும் என்பது பற்றி, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்”, என்று கேட்டேன்.
அதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, “இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உபகுழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன்.” என்று கூறினார்.
“அரசியலமைப்பு திருத்தம் மூலம் நாட்டில் உடனடியாக இறுதி தீர்வு வராது என்பது எனக்கு தெரியும். ஆனால் நாட்டில் ஸ்திரத்தன்மை வருமே. அது தீர்வை கொண்டு வரும். இன்று மக்கள் நாடு முழுக்க போராடுகிறார்கள். அவதிபடுகிறார்கள். இது உங்களுக்கு பிரச்சினை இல்லையா” என திருப்பி கேட்டேன்.
“இல்லை, கவலை வேண்டாம் தம்பி..! மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அதற்குதான் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க போகிறேன். அப்புறம் பாருங்கள், இந்த போராட்டங்கள் எல்லாமே முடிவுக்கு வந்து விடும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறி முடித்தார்.
20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லி இருந்தாலும், இதற்கு அவர் முன்னுரிமை அளிக்கவில்லை என இப்போது தெரிகிறது. நாட்டில் மக்கள் போராடுவது, உணவு, மருந்து, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு, உரம் போன்ற பொருளாதார தேவைகளுக்காத்தான் என அவர் உறுதியாக நம்புகிறார். ஆகவே அவற்றுக்கு தீர்வு கண்டால் இந்த போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என அவர் நம்புகிறார். இதற்காக அவருக்கு நட்பு நாடுகள் உதவும் எனவும் அவர் நம்புகிறார்.
ராஜபக்ச குடும்பத்தார் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், வீணடிப்பு, தவறான நிதிக்கொள்கை போன்ற விடயங்கள் பற்றி அவர் எதுவும் கூறாவிட்டாலும்கூட, இவைபற்றிய போராட்டங்களையும் கூட அவர் முக்கியமாக கருதவில்லை என தெரிகிறது.
இதுபற்றி நேற்றிரவு ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பேசினேன். இன்று ஏனைய எதிரணி கட்சி தலைவர்களிடமும் பேசவுள்ளேன். அனைத்து எதிரணி கட்சிகளும் தங்கள் செயற்பாடுகளை கூட்டிணைக்க வேண்டும் என விரும்புகிறேன்.