நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது.
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பலர் கலந்துக்கொண்ட இவ்விழாவில் பார்த்திபனும் ஏ.ஆர்.ரகுமானும் உரையாடல் நிகழ்வு நடந்தது. அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி மேடைக்கு கிழே எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேடையில் இருந்த ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் அங்கு நடந்த அந்த நிகழ்வுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். ஏ.ஆர்.ரகுமான் முன் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.