பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரும் மாதங்களில் நாட்டில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் ரணில் கூறினார்.
இலங்கையில் 4 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர். கடைசியாக 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை பிரதமராக இருந்தார்.
தற்போதைய அரசை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கும் ரணில், போராடும் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும் என் தெரிவித்தார்.
இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று கூறிய அவர், இலங்கையை தன்னையே சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
கே: இலங்கைக்கு இந்த சிக்கல் ஏன் ஏற்பட்டது?
ப: ஏனெனில் நாம் பொருளாதாரத்தின் அடிப்படைகளை மறந்துவிட்டோம். இலங்கை பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. நிறைய சிக்கல்கள் இருந்தன. முக்கியமாக கடன் நிலைத்தன்மை மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை சார்ந்தவை. 2015ல் அவர் அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்ட போது ஒரு ஐஎம்எஃப் திட்டத்திற்கு உடன்பட்டோம். இது நமது அடிப்படை நிதி நிலையில் ஒரு உபரி இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாம் உபரி நிலையை அடைந்தோம். அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்தோம். ஆனால் அதைச் செய்வதற்கு நாங்கள் வரிகளை உயர்த்த வேண்டியிருந்தது.
இந்த அரசாங்கம் ஐஎம்எஃப் திட்டத்தையும் தொடர்பையும் தொடர்ந்திருந்தால், கோவிட் பின்னடைவுகளின் போதுகூட இந்த அரசாங்கம் வலுவாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 2019ல் அத்தனை வரிகளையும் குறைத்தார்கள். கார்பரேட் துறையினர் அரசாங்கத்திடம் சொன்னார்கள், வரிகளைக் குறைத்தால் பொருளாதாரம் பெருகும் என்று. ஆனால் 2020ன் முதல் காலாண்டில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
வரிகளைக் குறைத்ததனால் ஐஎம்எஃப்- இடம் அவர்கள் போகவில்லை. அவர்கள் வரிகளை உயர்த்த விரும்பவில்லை. பிறகு கோவிட் வந்தது. நாம் நமது கையிருப்பிலிருந்ததை எடுக்கத் துவங்கினோம். 7 பில்லியனிலிருந்து, நிகர அளவில், 500 மில்லியனுக்கும் கீழே வந்துவிட்டோம். 200-300 மில்லியன் கூட இருக்காது. எனவே இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடி. உரங்களைத் தடை செய்ததனால் இது மேலும் மோசமானது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தொடர்ந்தது.
சந்தைப் பொருளாதாரத்திற்கு பதில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டுவந்தார்கள். இது அந்நியச் செலாவணி கையிருப்பை காலி செய்துவிட்டது.
கே: இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கம் மட்டும் தானா, அல்லது முந்தைய அரசாங்கங்கள் கூடவா?
ப: தற்போதைய அரசாங்கம் என்று தான் சொல்வேன். ஐஎம்எஃப்இன் அறிக்கையை பார்த்தீர்களானால், இலங்கை ஐஎம்எஃப் திட்டத்தில் தொடரவில்லை என்று சொல்கிறது. அவர்கள் வரிகளையும் நிதியையும் குறைத்து விட்டார்கள் என்று சொல்கிறது.
சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து விலகியதுதான் விஷயம். 2019 வரை சந்தைப் பொருளாதாரம் இருந்தது. அது தொடர்ந்திருந்தால், இந்த அரசாங்கம் அரசியல் ரீதியில் அசைக்க முடியாததாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
கே: இதைத் தவிர்த்திருக்க என்ன செய்திருக்க வேண்டும்?
ப: வருமான வரியைக் குறைத்திருக்கக் கூடாது. அடிப்படை நிதிநிலையில் உபரி இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அந்நியச் செலவாணி ஈட்டலை அதிகரித்திருக்க வேண்டும். கோவிட் தாக்கியபோது ஐஎம்எஃப் – இடம் சென்றிருக்க வேண்டும்.
கே: கொழும்பிலும் தேசம் முழுதும் மிகப்பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் விலகச் சொல்கிறார்கள். இதுகுறித்து உங்கள் கருத்து?
ப: போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பலரும் இந்த ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் வாக்களித்தவர்கள். அவர்கள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள். 2019க்கு முன்புவரை நன்றாக வாழ்ந்தார்கள். தற்போது அவர்கள் வாழ்க்கைத் தரத்தை இழந்துவிட்டார்கள். இதற்கு பொறுப்பு அரசாங்கம் என்று சொல்கிறார்கள். அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் சில அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று சொல்கிறார்கள்.
கே: இது மேலும் மோசமாவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எதாவது அற்புத மருந்து இருக்கிறதா?
ப: அற்புதங்கள் எதுவும் இல்லை. எதிர் கட்சிகள் போராட்டக்காரர்களோடு நின்றிருக்கிறார்கள். அவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் பதவி விலக வேண்டும் அல்லாவிடில் எந்த அரசாங்கத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அரசாங்கம் தங்கள் பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அரசாங்கத்திற்கு 113 இடங்கள் இல்லை. அதனால் அரசாங்கத்துடன் இருக்கும், மற்றும் வெளியேறிய SLPP உறுப்பினர்கள் மூலம் 113 இடங்களைப் பெறுவதாகச் சொல்கிறார்கள். புதிய பிரதமரை நியமிக்க விரும்புகிற்றார்கள். ஆனால் அது வேலைக்கு ஆகாது.
நமக்கு அவர்கள் கொள்கைகள் தெரிய வேண்டும். இந்த சீரழிவுக்கு அவர்களில் பலரும் காரணமாக இருப்பதால், அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும்.
கே: இடைக்கால அரசாங்கத்திலோ, வருங்கால அரசாங்கத்திலோ தங்கள் பங்கு என்னவாக இருக்கும்?
ப: இடைக்கால அரசாங்கத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் இடைக்கால அரசாங்கத்திற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் வழங்கவில்லை. இந்த அரசாங்கம் சென்றால், இன்னொரு அரசாங்கம் அமையவேண்டும்.
ஒரு வாரமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடங்களோ, அதுவல்ல பிரச்சனை. ஒரு அரசாங்கம் என்பது, ஒரு அரசாங்கம். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஒரு பராமரிப்பு அமைச்சரவைக்கான ஏற்பாடு தான் உள்ளது.
கே: எதிர்காலத் திட்டங்கள் ஏதேனும்?
ப: எனக்குத் தனிப்பட்ட எதிர்காலத் திட்டங்கள் இல்லை. நான் அரசாங்கத்தின், மக்களின் எதிர்கால திட்டங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன்.
கே: அரசாங்கமோ, பிரதமரோ முடிவெடுக்கும் முன் உங்களை கலந்தாலோசிக்கிறார்களா?
ப: இல்லை. அது அரசாங்க விஷயம். நான் பிரதமரை நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ சந்திக்கிறேன். நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம். ஆனால் அதற்காக நான் அரசாங்கத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.
கே: நாட்டிற்கு தலைமை ஏற்கவோ, இந்த சிக்கலிலிருந்து நாட்டை வெளிக்கொண்டு வரவோ தயாராக இருக்கிறீர்களா?
ப: சரியான திசையில் செல்லும் சரியான கொள்கைகள் இருந்தால் நாட்டை தற்போதைய நிலைமையிலிருந்து மீட்கலாம். அந்த சவாலை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள விரும்புகிறதா என்பதுதான் கேள்வி. எதிர்காலம் நாடாளுமன்றம் என்ன செய்ய விரும்புகிறது என்பதைச் சார்ந்துதான் இருக்கிறது.
கே: இன்னும் ஆறு மாதங்களில் இலங்கையின் நிலைமை என்னவாக இருக்கும்?
ப: இன்னும் மோசமாகலாம்.
கே: எவ்வளவு மோசம்?
ப: மிக மோசமானவை இனிதான் வருமென்று சொல்லியிருக்கிறேன்.
கே: விளக்க முடியுமா?
ப: உதாரணத்திற்கு, விலைவாசி உயரும். எரிபொருள், அந்நியச் செலவாணி ஆகியவற்றின் தட்டுப்பாட்டால், தொழில்கள் மூடப்படும். வங்கிகள் நிறைய செயல்படாத கடன்களைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு அதைச் செய்ய முடியாது. இது கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்டது. நிறைய திவால்கள் நிகழும். இதன் பொருள் பொருளாதாரம் மோசமாகும் என்பதுதான்.
கே: இலங்கையை ஆதரிப்பதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
ப: கடன் வசதியை வழங்குவதன் மூலம் இந்தியா உதவி வந்திருக்கிறது. இரண்டாவது முறையாக எரிபொருள் தந்தும் உதவக்கூடும். ஆனால், இந்தியாவோ வேறெந்த நாடோ செய்யக்கூடிய உதவிக்கும் ஒரு அளவு இருக்கிறது. தேசத்தை முதலில் சீர்படுத்த வேண்டும்.
கே: இந்தியா மேலும் செய்வதற்கு எதாவது உள்ளதா?
ப: இந்தியா இலங்கையின் பொருளாதாரத்தைச் சரிபடுத்த முடியாது, அதை நாங்கள்தான் செய்ய வேண்டும்.
கே: தமிழ்நாடு இலங்கையை ஆதரிக்கத் தயாராக உள்ளது. எப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறிர்கள்?
ப: அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தங்களுடன் இணைந்து செய்யுமாறு கூறியிருக்கிறது. அது சரியானதாகப் படுகிறது.
கே: தற்போதைய நிலைமையும் போராட்டங்களும் மக்களை முதன்முறையாக ஒன்றிணைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ப: பசி எப்போதும் மக்களை ஒன்றிணைக்கும்.
கே: இது அரசியலுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?
ப: ஒற்றுமையை விரும்பும் அனைவருக்கும் நல்லது. பிரிவினையை விரும்புபவர்களுக்கு அல்ல.
கே: மாகாணச் சபைகளுடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கும், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கும் இது சரியான தருணம் என்று நினைக்கிறீர்களா?
ப: ஒன்றிணைந்த தேசத்தைப் பொறுத்தவரை 13வது சட்டத் திருத்தத்தை சரிசெய்வதற்கு இன்னும் இடம் இருக்கிறது என்று எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் இதை ஏற்கின்றன. இதற்கு ஒரு தீர்வு காண இது ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரசாங்கமும் அதையே நினைக்கிறதா என்று தெரியவில்லை.
கே: இப்போது முதலில் செய்யப்படவேண்டியது என்ன?
ப: முதல் படி — காலி முகத்திடலில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள போராட்டக்காரர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அதன்படி நடக்கவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அரசு ஒரு புதிய பிரதமரைக் கொண்டுவரப் பார்க்கிறது, ஆனால் ஜனாதிபதி பதவியிலேயே நீடிக்கிறார். அவர்கள் மக்களை சமாதானப்படுத்த முடியுமா? அது முடிந்தால் அரசாங்கம் தொடரலாம். இல்லையெனில் அது விலகிதான் ஆகவேண்டும்.
இரண்டாவதாக — பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய கால, இடைக்கால, நீண்டகால திட்டங்கள் வேண்டும்.
மூன்றாவதாக — மக்களிடையே இருக்கும் இந்த ஒற்றுமையை காக்க வேண்டும்.
நான்காவதாக — இளைய தலைமுறைக்கு புதிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் வழமையான சமூகத்தின் மீதும் அரசியலின் மீதும் விரக்தியில் இருக்கிறார்கள். நாம் அவர்கள் கேட்பதை தரவேண்டும். அவர்கள் குரல்களும் கேட்கப்படுவதை உறுதி செய்ய்வேண்டும்.
(பிபிசி தமிழ்)