மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர்.
பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால், இருவரின் காதலுக்கும் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால், பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 31-ம் தேதி நாகராஜூ – சுல்தானா திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிய தம்பதியர் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருந்து வெளியேறி ஐதராபாத்தின் சரோன் நகரில் குடியேறினார். நாகராஜூ தனியார் கார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், தங்கள் எதிர்ப்பையும் மீறி நாகராஜூவை திருமணம் செய்துகொண்டதால் சுல்தானாவின் சகோதரன் சையது மொபின் முகமது உள்பட குடும்பத்தினர் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், திருமணம் செய்துகொண்ட இருவரும் எங்கு உள்ளனர் என சுல்தானாவின் சகோதரன் சையது தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், தனது சகோதரி சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் சரோன் நகரில் இருந்தது முகமதுவுக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரவு முகமது தனது உறவினரான முகமது மசுத் அகமதுவுடன் பைக்கில் சரோன் நகருக்கு சென்றுள்ளார்.
சரோன் நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் நடுவே சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் பைக்கில் சென்றபோது அந்த பைக்கை முகமது இடைமறித்துள்ளார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் நாகராஜூவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த நாகராஜூ நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
கணவனை தனது சகோதரன் முகமது இரும்பு கம்பியால் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சுல்தானா தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், முகமதுவும் அவரது உறவினருமான மசுத் அகமதுவும் சுல்தானாவை தள்ளிவிட்டு நாகராஜூவை இரும்பு கம்பியால் மீண்டும் மீண்டும் தாக்கியும் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும் கொரூரமாக கொலை செய்தனர்.
இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நடுரோட்டில் நிகழ்ந்த நிலையில் சுற்றி இருந்த அனைவரும் இந்த கொடூர சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ள அவலமும் அரங்கேறியுள்ளது. பின்னர் சுல்தானா அருகில் இருந்தவர்களிடம் தாக்குதலை தடுக்கும்படி கொஞ்சிய நிலையில் அருகில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்திய முகமது மற்றும் அவரது உறவினர் அகமதுவை அடித்து உதைத்துனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளிகள் முகமது மற்றும் அகமதுவை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.