இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று அல்லது நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீவு நாடான இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன். தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது என தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறும்போது, இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அமைச்சரவையை நியமிப்பேன் என அறிவித்து உள்ளார்.
இந்த புதிய அமைச்சரவை அரசியல் சாசன சீர்திருத்தங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது. இதனால், ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனப்பான்மையில் சற்று மாற்றம் ஏற்படும். அதனுடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அதிபர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர், ரணில் விக்ரமசிங்க-விடம் கோரியதாகவும், அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் பதவியை ஏற்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவும் நேற்று ஆலோசனை நடத்தினர். இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை, புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் தான் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் பல கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படக்கூடாது எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைக்கப்பட உள்ளது.
இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.