மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேருக்கு வெளி நாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
…….
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.
‘நாட்டின் சமகால அரசியல் போக்கும், நிதர்சன நிலைப்பாடும்’ எனும் தொனியில், அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கருத்தை அவர் வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அசாத் சாலி, ஐந்து வருடங்கள் பிரதமராக பதவி வகித்த ரணில், சர்வதேச செல்வாக்கிலுள்ளவர். பொருளாதார ரீதியில் ரணிலிடமுள்ள விரிந்த நோக்குத்தான் எமது நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும். இம்முறை தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் வந்த காலத்திலிருந்தே, இவ்வாறான நெருக்கடி குறித்து எச்சரித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறும், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெறுமாறும் ஏற்கனவே ரணில் அறிவுரை கூறியிருந்தார். அவரது பொருளாதார புலமைகளைப் புரிந்துகொள்ள இவை போதுமானது. இன்னும் ரணிலிடமுள்ள பழுத்த அரசியல் அனுபவமும், பக்குவமும் பிரதமர் பதவியை வழங்குவதற்குப் போதுமான தகமைகளாகும்.
என்னைச் சிறையிலடைத்த காலத்திலும் இந்த நெருக்கடி நிலை ஏற்படும் ஆபத்தை எச்சரித்திருந்தேன். எனவே, சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் விடயத்தில், சகல கட்சிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீழ்ச்சி பெறுவதற்கு, ரணிலைப் பிரதமராகக் கொண்ட சர்வகட்சி அரசாங்கமே அமைக்கப்பட வேண்டும்” என்றும் அசாத் சாலி தெரிவித்தார்.
—–
நீர்கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களில் திருடப்பட்ட பொருட்களில் சில மீள ஒப்படைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றைத் கட்டானைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அவர்களின் அடையாள விவரங்களை பதிவு செய்து பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக நிலவி பதற்றமான சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பில் உள்ள பல ஹோட்டல்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.