ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும்

ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாளார்களான ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டு அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் தீவைத்து எரிக்கப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம். அதற்குத் துணைபோன அப்பாவி சிங்கள மக்கள் ஐம்பதாண்டுகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர்.

ஒரு நாட்டில் உண்ண உணவும், குடிக்க நல்ல நீரும் கிடைக்காத போது அங்குப் புரட்சி ஏற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு நிகழ்காலச் சாட்சியாக இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன. இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை இந்தியாவிற்கும் ஏற்படலாம்.

எனவே இனியேனும் இந்திய பெருநாட்டை ஆளும் மோடி அரசாங்கம் மதத்தின் மூலம் மக்களைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியையும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து அவர்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்து இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரும் கொடுங்கோன்மையை இனியாவது கைவிட வேண்டும்.

இல்லையென்றால் ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்திய இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மேலும், தற்போது சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு லட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts