நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்ட்டர்பார் பிலிம்ஸ்-ன் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகிறார். கொலவெறி டி பாடலின் மூலம் பாடலாசிரியர் ஆன தனுஷ், தொடர்ந்து பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டார்.
அதைத்தொடர்ந்து சிவார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற தனுஷ் தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தார். இதன்படி வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, விசாரணை, நானும் ரவுடிதான், விஐபி 2, காலா, வடசென்னை என தொடர்ந்து படங்களை தயாரித்தார். கடைசியாக மாரி 2 படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். அதன் பின் அவர் எந்த ஒரு படத்தையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்ட்டர்பார் பிலிம்ஸ்-ன் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ‘ரவுடி பேபி’ பாடல் மற்றும் வீடியோக்கள் நீக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தனுஷின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
முன்னதாக மாரி 2 படத்தின் பிரபல பாடலான ரவுடி பேபி பாடல் வெளியாகி பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.