இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் “அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த குறித்த நன்கொடை உதவித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி இன்று(27) மாலை 3.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஜெ. ராகேஷ் நடராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இதன் முதற்கட்டமாக இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு மற்றும் செல்வபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச சேர்ந்த முப்பது பேருக்கான உதவி வழங்கி வைக்கப்பட்டது.
துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோகிராம் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மிகுதி வழங்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பைக்கட்டுக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பால்மா பை மட்டும் வழங்கப்படும்.