அன்புள்ள கேகே… என்ன அவசரம் நண்பா’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் கேகே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அன்புள்ள கேகே… என்ன அவசரம் நண்பா… உங்களைப் போன்ற திறமையான பாடகர்களும் கலைஞர்களும் இந்த வாழ்க்கையை இன்னும் கூடுதலாக தாங்கக் கூடியதாக மாற்றினீர்கள்…” என பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மின்சார கனவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெரி கண்ணே’ உள்ளிட்ட பாடல்களை கேகே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்றிரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாசார விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.