மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. கொல்கத்தா, பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின்படி, கிட்டத்தட்ட மூன்று மணி நேர மேடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே பாடகர் கே.கே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் தனது கை மற்றும் தோள்களில் வலியை அனுபவிப்பதாக தொலைபேசி உரையாடலின் போது தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பல ஆன்டாக்சிட் மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.