தொடர் வேட்டையினால் அயற்சியில் இருக்கும் சிங்கத்தை சமயம் பார்த்து நரிகள் கவிழ்க்க திட்டமிட, அதையறிந்து வீறுகொண்டெழுந்த சிங்கத்தின் நரிகளுக்கு எதிரான கர்ஜனை தான் ‘விக்ரம்’.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக கொல்லப்படுகின்றனர். இதற்கான காரணத்தையும், குற்றவாளிகளையும் கண்டறிய, காவல் துறையினரால் ஃபஹத் ஃபாசில் தலைமையிலான ரகசிய குழு ஒன்று நியமிக்கப்படுகின்றது. இந்தக் குழு விசாரணையில் இறங்க, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளை கொன்றது யார்? அவர்கள் ஏன் கொல்லப்படுகின்றனர்? இதற்கான பின்புலம் என்ன? – இவற்றை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ஃபஹத் ஃபாசிலுடன் சேர்ந்து நமக்கும் விடையளிக்கும் படைப்புதான் ‘விக்ரம்’.
2019-ம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு திரையில் கமல். அவருக்கு 67-வயது என்கிறார்கள். கால ஓட்டத்தில் நிச்சயம் எதுவும் தவறு நிகழ்ந்திருக்கலாம். திரையில் எந்த இடத்திலும் 67 வயதான கமலை காண முடியவில்லை. பொதுவாகே வழக்கமான படங்களைக் காட்டிலும் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படங்களுக்கு அதீத எனர்ஜி தேவை. அந்த எனர்ஜியை கொடுத்து முந்தையப் படங்களில் பார்த்த அதே ஆற்றலுடன் இறங்கி களமாடியிருக்கிறார்.
கோபத்தில் வெகுண்டெழுந்து சீறிப் பாய்வதும், அன்பில் அடங்கி உருகி மருகுவதும், ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்து, கன்னத்தைக்கூட நடிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக, மிஷின் துப்பாக்கி வைத்து சுட்டுத்தள்ளும் காட்சி திரையரங்கை அதிர வைக்கிறது. திரையில் கமலுக்கு கூடுதலான ஸ்கீரின் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம் என்ற ரசிகர்களின் முணுமுணுப்பு கேட்கவே செய்கிறது.
படத்தின் முதல் பாதி முழுவதையும் தனது முக பாவனைகளால் மட்டுமே சுமந்து சென்றிருக்கிறார் ஃபஹத் ஃபாசில். ‘எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது… உங்களுக்கு இருந்தால் மீறப்படும்’ என்று திமிரான உடல் மொழியுடன் இரக்கமில்லாத துருவித் துருவி விசாரிக்கும் ஏஜெண்டாக மிரட்டுகிறார். ‘புஷ்பா’ படத்திற்காக குறைத்த உடல் எடையை இந்தப் படத்திலும் காண முடிகிறது. குறிப்பாக, குழந்தையை மீட்க போராடும் காட்சிகளில் உச்சம் தொடுகிறார்.
முதல் பாதியை ஃபஹத் ஃபாசிலிடம் ஒப்படைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் லோகேஷ். வித்தியாசமான முக பாவனைகள், பல்லை திறக்காமல் பேசும் வார்த்தைகள், அலட்டிக்கொள்ளாத உடல் மொழி என அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. சட்டையின்றி நடந்து வரும் அவரது இன்ட்ரோ காட்சிகள், நடிப்பின் மீதான அவரது காதலை காட்டுகிறது.
குறிப்பாக ‘பாப்பாய்’ கார்ட்டூனில் கீரையை சாப்பிட்டதும் பாபாய்க்கு வீரம் வருவதைப்போல போதை வஸ்தை சாப்பிடவுடன் அதிரடி காட்டுகிறார்.
காளிதாஸ் ஜெயராமன், செம்பன் வினோத், நரேன், ரமேஷ் திலக், காயத்ரி ஷங்கர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சூர்யா. அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் திரையில் விருந்து காத்திருக்கிறது.
கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி மூவருமே நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் டஃப் கொடுத்தும், ஸ்கீரின் ஸ்பேஸ் குறித்து கவலைப்படாமல் நடித்திருக்கின்றனர். படம் தொடங்கியதும் எந்தவித சமரசமுமின்றி கதைக்குள் நுழைந்துவிடுகிறது. அது படத்துக்கு பலம் சேர்க்கிறது.
படம் ஆக்ஷன் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டாலும், இடையிடையேயான சில சர்ப்ரைஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, மொத்த படத்தையுமே தூக்கி நிறுத்துகிறது இன்டர்வல் ப்ளாக் சண்டைக்காட்சி. அது படமாக்கப்பட்ட விதமும், விறுவிறுப்பும் ரசிக்க வைக்கிறது. அந்த சிங்கிள் ஷார்ட் சண்டைக்காட்சியில் கேமராவை முன்னும் பின்னும் நகர்த்தி தெறிக்க விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ் கங்காதரன்.
போதைப்பொருட்கள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆயிரத்தி ஓராவது படமாக இந்தப் படம் இடம்பெற்றிருக்கிறது. பொறுமையாக தொடங்கும் திரைக்கதை விசாரணையால் வேகமெடுக்கிறது. இருப்பினும் முதல் பாதியின் நீளம், முழுப் படத்தையும் பார்த்த உணர்வை கொடுக்கிறது.
ஃபஹத் ஃபாசிலுக்கும் காயத்ரி ஷங்கருக்குமான காதல் காட்சிகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன. போர்கொண்ட சிங்கம் பாடல் சென்டிமென்டுக்கான உணர்வே எழாத இடத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ‘பத்தல பத்தல’ பாடலும் கூட கமல் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இரண்டாம் பாதியும் பொறுமையாகவே தொடங்கி ஆக்ஷன் காட்சிகள், ஃப்ளாஷ்பேக் காட்சிகள், சர்பரைஸ் காட்சிகளால் வேகமெடுக்கிறது. இடையில் கமல் வகுப்பெடுப்பதை பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
1986-ம் ஆண்டு வெளியான கமலின் முந்தைய ‘விக்ரம்’ படத்துடன் தொடர்புபடுத்திய விதம் ஈர்க்கிறது. இதுபோல சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது. ‘கைதி’ படத்தை முன்னதாக லோகேஷ் கனகராஜ் பார்க்கச் சொன்னதற்கான காரணம் திரையில் தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான ஸ்கோப்புகளை கொடுத்திருக்கிறார் லோகேஷ்.
படத்தில் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் தோட்டாக்களுக்கு இணையாக ஒலிக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. துப்பாக்கியை லாக் செய்யும் சத்தத்தை வைத்தே பிண்ணியிருக்கும இசை கவனம் பெறுகிறது.
அண்மைக் காலமாக திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வரும் கிருஷ் கங்காதரனுக்கு இது முக்கியமான படம். பல இடங்களில் அவரது ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் லோகேஷ் பேச்சை கேட்காமல் படத்தின் நீளத்தை மட்டும் குறைந்திருக்கலாம். சில இடங்களில் அவரின் நான் லினியர் கட்டிங் கச்சிதம். அன்பறிவின் சண்டைக்காட்சிகள் தரம். விஎஃப்எக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுவதை உணர முடிந்தது.
மொத்ததில் ஆக்ஷன் த்ரில்லர்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘விக்ரம்’ திகட்டாத திரையனுபவம்.