10 வருட காலத்தில் நான் நடித்து எந்தவொரு பிரச்சினை இல்லாமல் வெளிவந்த படம் “விக்ரம்” தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை, விக்ரம் படத்தின் வெற்றிவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:- விக்ரம் படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது.
10 வருட காலத்தில் நான் நடித்து எந்தவொரு பிரச்சினை இல்லாமல் வெளிவந்த படம் “விக்ரம்” தான். இந்த வெற்றி சுலபமாக வந்தது இல்லை. உதயநிதி ஸ்டாலின் நேர்மையானவர்.
தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூலம் நிறைய படங்களை அவர் வெளியிட வேண்டும். பெருங்கிளையாக ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனத்தை உதயநிதி ஸ்டாலின் வளர்க்க வேண்டும்.
இந்த விசயத்தை அவர் அப்பாவிடமே நான் சொன்னேன். நாங்கள் குளிக்கும் குளம் கலை உலகம். இதில் எல்லா மொழிப் படங்களும் வெற்றி பெறும். பத்தல பத்தல என்று பாடல் எழுதினேன். ஆனால் எனக்கு பத்திக்கொண்டது.
லோகேஷ் கனகராஜ் வாத்தியாராக மாறவேண்டும். நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும்.
கற்றுக்கொடுக்கும்போதுதான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆரோக்கியமான விமர்சனங்களையும், தட்டிக்கொடுக்கும் பாராட்டுகளையும் ஊடகங்கள் தந்துள்ளன. தரமான சினிமா எடுக்கவேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.