எந்த மதத்தின் பெயரில் வன்முறை நிகழ்ந்தாலும் குற்றம்தான்

‘உலகில் உள்ள அனைத்து உயிருமே சமமானதுதான். நான் நேர்காணலில் கூறிய கருத்து, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது” என நடிகை சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ”விளக்கம் அளிப்பதற்காக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். முதன்முறையாக நான் பேச நினைப்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து மனதிலிருந்து பேசுகிறேன். காரணம், நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில், ‘நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? அல்லது இடதுசாரி ஆதரவாளரா?’ என என்னிடம் கேள்வி எழுப்பப்ப்பட்டது.

அதற்கு நான் நடுநிலையானவர் என்று கூறினேன். முதலில் நாம் மனிதநேயமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம் என கூறினேன். எதுவாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறி இரண்டு உதாரணங்களைச் சொன்னேன்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைப் பார்த்தேன். 3 மாதங்களுக்கு முன்பு ஒருமுறை படத்தின் இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம், படம் என்னை பாதித்தது குறித்தும், பாதிக்கப்பட்ட அம்மக்களின் அவலநிலையைக் கண்டு நான் வருந்தியது குறித்தும் இயக்குநரிடமே கூறியிருக்கிறேன்.

எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்ல வந்த கருத்தின் சாரம்சம். நிறையபேர் சமூக வலைதளங்களில் கும்பல் வன்முறைகள் குறித்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். ஒருவரை கொல்வதற்கு மற்றவருக்கு எந்தவித உரிமையுமில்லை. மருத்துவம் பயின்றவர் என்ற முறையில் அனைவரின் உயிரும் முக்கியமானது; அனைவரின் உயிரும் சமமாக கருதப்பட வேண்டியது.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு அடையாளத்தை சுமந்துகொண்டிருக்கிறது. என்னுடைய 14 வருட பள்ளி காலத்தில் ஒவ்வொரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது, இந்நாட்டின் அனைத்து குடிமக்களும் எனது அண்ணன், தங்கைகள், நான் என் நாட்டை நேசிக்கிறேன். இந்தியராக பெருமை கொள்கிறேன் என உறுதிமொழியேற்பேன். இது அனைத்தும் எனக்குள் ஆழமாக பதிந்திருக்கிறது.

பிள்ளைகளாக இருந்த நாங்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் கலாசாரம் அடிப்படையில் ஒருவரையொருவர் வேறுபடுத்தி அணுகியதில்லை. நான் எப்போது பேசினாலும் நடுநிலை பேணியே என் கருத்தை முன்வைப்பேன். ஆனால், என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முக்கியமான பிரபலங்களும், இணையதளங்களும் முழுமையான என் நேர்காணலை பார்க்காமல் கருத்து கூறியது வேதனையளிக்கிறது.

எனக்காக நின்ற உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என உணர வைத்தவ உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள்.

கரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்.

என் குடும்பத்தினர் என்னை நல்ல மனிதராக இருக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அவர்களின் அந்தஸ்து முக்கியமில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts