உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி பல்கலைகழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உக்ரைன் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மந்திரி ஜெய்சங்கர் பேசினார். நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது; தெற்காசியாவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.
இந்த பிராந்தியத்தின் ஒன்றிணைப்பையே அண்டை நாடுகளும் விரும்புகின்றன. உக்ரைன் விவகாரத்தில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.
இது மிகவும் சிக்கலான விவகாரம். இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தீங்கை அதிகரிக்கும் வகையிலான பகைமையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தான்.
பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதிக்கு திரும்பி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்வதை ஊக்குவிக்க வேண்டும். இது தான் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியா அதன் சொந்த நலனில் முக்கியத்துவம் கொண்டுள்ளது.
உக்ரைன் போரில் இருந்து மிகப்பெரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. எரிபொருள், உணவு, உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனது மக்களின் நலனுக்கு பொறுப்பான ஒருவராக, அவர்களின் நலனை உறுதிப்படுத்த நான் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்’ என்றார்.