பண்ணையாளரான கடுவாகுன்னேல் குறியாச்சனுக்கும், அரசியல் அதிகார பலம் கொண்ட காவல்துறை ஐஜி ஜோசப் சாண்டிக்கும் இடையிலான முட்டல், மோதல்கள்தான் படத்தின் ஒன்லைன்.
90களின் பிண்ணனியில் நடக்கிறது கதை. கார், பங்களா, எஸ்டேட் என செல்வம் கொழிக்கும் பண்ணையாளராக இருக்கும் குறியாச்சனும் (பிரித்விராஜ்). அதே பகுதியில் அரசியல் அதிகார பின்புலம் கொண்ட ஐஜியான ஜோசப் சாண்டியும் (விவேக் ஓப்ராய்) ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள். இந்தச் சூழலில், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சர்ச் ஒன்றுக்கு பியானோ வழங்கிய விவகாரத்தில் இருவருக்குள்ளும் மோதல் வெடிக்கிறது. அந்த மோதல் நாளடைவில் விரிவடைய, அதிகார பலத்தால் குறியாச்சன் வேட்டையாடப்படுகிறார். இறுதியில் அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பதுதான் ‘கடுவா’ படத்தின் திரைக்கதை.
ஜினு ஆப்ரஹாம் படத்துக்கு கதை வசனம் எழுத, ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கிறார். பிரபலமான மலையாள இயக்குநரான இவர், தமிழில் விஜயகாந்தின் ‘வாஞ்சிநாதன்’, அஜித்தின் ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘கடுவா’. மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் மாஸ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணக்கூடிய படங்களில் ஒன்றாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.படத்தில் குறியாச்சான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரித்விராஜ். க்ரைம் – த்ரில்லர், ஜாலியான காதல் படங்கள், மாஸ் படங்கள் என எந்த வகையறா சினிமாக்களை எடுத்துக்கொண்டாலும் பிரித்விராஜ் பொருந்திப் போகக் கூடியவர். அப்படித்தான் வெள்ளை வேட்டி, கருப்பு ஷூவுடன் இன்ட்ரோ கொடுக்கும் காட்சியிலிருந்தே மிரட்ட தொடங்குகிறார். அவருக்கு ஒரே காஸ்டீயூம் தான் என்றாலும், அது கச்சிதமாக பொருந்தவே செய்கிறது.
சண்டைக்காட்சிகளிலும், தந்தையாகவும், கணவனாகவும், பழிவாங்கும் வேங்கையாக நடிப்பால் கதாபாத்திரத்தை மெருகேற்றுகிறார். அவருக்கு டஃப் கொடுத்து நடித்திருக்கிறார் விவேக் ஓப்ராய். காவல்துறை அதிகாரியாக பொருந்திப்போகிறார். ஃபிட்டான பாடியுடன், காவல்துறையினருக்கே உண்டான திமிருடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிருத்விராஜ் மனைவியாக சம்யுக்தா மேனன் பெரிய அளவில் ஸ்கோப் இல்லாத கதாபாத்திரமாக எஞ்சி நிற்கிறார். நடிகை சீமா சில காட்சிகள் வந்தாலும் தான் மூத்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். தவிர, நிறை துணை நடிகர்கள் படத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் உரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.படத்தை எடுத்துக்கொண்டால் அதன் மொத்த பலமும் அதன் கதைதான். இருதரப்பினருக்கும் இடையேயான மோதலை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்த நிறையவே ஸ்பேஸ் கொண்ட கதைக்களம். அப்படிப்பார்க்கும்போது ‘கடுவா’வின் திரைக்கதை அதை சில இடங்களில் நிவர்த்தி செய்தாலும், பல இடங்களில் சொதப்பியிருக்கிறது.
உதாரணமாக, ஒரு மோதல் கதைக்கும், அதையொட்டி நீளும் பழிவாங்கும் படலத்திற்கும் முக்கியமானது அதற்கு சொல்லப்படும் காரணம். அந்தக் காரணம் தான் படத்தின் மொத்த எடையையும் தூக்கி சுமக்க கூடிய புள்ளி. ஆனால், படத்தில் ஏற்க முடியாத பலவீனமான காரணத்தை வைத்துக்கொண்டி இரண்டு பேரும் சண்டையிடுவது பீஸ் இல்லாமல் இதுதான் பிரியாணி என நம்ப வைத்து சாப்பிட சொல்வது போல இருக்கிறது.தெலுங்கு படங்களே மாஸை லிமிட்டாக பரிமாறலாம் என முடிவெடுத்திருக்கும் சூழலில், மலையாள படமான கடுவா ஏகத்துக்கும் அள்ளி தெளித்திருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், ஒரு காட்சியில் இரும்பு பக்கெட் ஒன்று மண்ணில் விழுந்த வேகத்தில் ரப்பர் பந்துப போல பவுன்சாகிறது. ஈர்ப்பு விசை குறித்து யாருக்கென்ன கவலை. காவல்துறை அதிகாரிகளை இஷ்டத்துக்கு தூக்கிப் போட்டு மிதிப்பது, எத்தனை பேர் வந்தாலும் வந்தவர்கள் வந்த வேகத்தில் சுருண்டு விழுவது என மசாலா நெடி தூக்குகிறது.
தவிர, அரசியலை பின்னணியாக வைத்துக் கதையை கொண்டு சென்ற விதம், சில நாயகனுக்கும் வில்லனுக்குமான சில ஃபேஸ் ஆஃப் காட்சிகள், விவேக் ஓப்ராய்க்கு எதிராக களமாடும் பிரித்விராஜின் திட்டங்கள் என படத்தை கவனிக்க வைக்கிறது.
ஜோசப் சாண்டி, உதவி ஆய்வாளர் டொமினிக் மற்றும் ஃபாதர் ராபின் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பிரித்விராஜை டார்கெட் செய்து வேட்டையாடுவது கதையின் போக்கிற்கு விறுவிறுப்பு சேர்க்கிறது. ஆனால், அதற்கு பிரித்விராஜ் எப்படியெல்லாம் பதிலடி தரப்போகிறார் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஓகேவான பதிலடி என்றாலும் திருப்தியாக இல்லை.வெறும் கார் கதவை திறக்கும் ஒரு ஷாட்டில் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் தன்னை கவனிக்க வைத்திருப்பார். அப்படியான ரசிக்கக் கூடிய பல ஷாட்டுகள் படத்தில் உண்டு. படத்தொகுப்பாளர் ஷமீர் முகமது முதல் பாதியையும், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் நீளத்தையும் குறைக்க ஏன் தயக்கம் காட்டினார் என தெரியவில்லை. ஜேக்ஸ் பிஜாயின் இசை ஸ்லோமோஷன், மாஸ் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது என்றாலும், சில இடங்களில் ‘பீஸ்ட்’ பட பின்னணி இசையின் சாயல் தென்படுகிறது.
மொத்தத்தில், மாஸ் – மசாலா பட விரும்பிகளின் மனதை மட்டும் ‘கடுவா’ சற்றே வெல்ல வாய்ப்பு உண்டு. மற்றவர்களை… …. ….?
வீடியோ வடிவில் விமர்சனத்தைக் கா