லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் படத்தில் நடித்துள்ள முன்னணி நாயகர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி தான் நடித்துள்ள வந்தியத்தேவன் பாத்திரம் குறித்து பேசினார்.
அதில், “நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு பாடம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10 வினாடி வீடியோவைப் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறார்கள்.
ஆனால், 5 பகுதிகளைக் கொண்ட ஒரு புத்தகத்தை மணி சார் படமாக்கியிருக்கிறார். வரலாறு படிக்காமல்.. படைக்க முடியாது. இந்த இளைய தலைமுறையினருக்கு வரலாறு படியுங்கள் என்று சொல்கிறேன்.
இப்படத்தைப் பார்க்கும்போது பெருமிதம் வரும். அப்படி பெருமிதம் வரும்போது இதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். பொன்னியின் செல்வன், மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும்.
நான் எனது அம்மாவிடம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியதேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவார்கள் என்று கூறினார். அம்மாடியோவ்… அவர் என்ன அவ்வளவு பெரிய லவ்வர் பாயா? என்று கேட்டேன். அதன் பிறகு வரலாறு படிக்கும் நண்பனிடம் கேட்டேன், வந்தியதேவனை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்ட போது ஐஏஎஸ் அதிகாரி தான் என்று கூறினார். ஐஏஎஸ் அதிகாரிக்கு எல்லாம் தெரியும். அது போல குதிரையேற்றம், போர் போன்ற எல்லாக் கலைகளையும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
அவருக்கென தனி பிரிவு கிடையாது என்று கூறினார். வந்தியதேவன் ஒரு இளவரசன் ஆனால் அவனுக்கு நாடு கிடையாது. ஆனால் அவன் பேராசை கொண்டவன். அவனுக்கு எல்லா ஆசைகளும் உண்டு. பெண் ஆசையிலிருந்து பண ஆசை வரை எல்லா ஆசைகளும் உண்டு. ஆனால், மிகவும் நேர்மையானவன். இது தான் எனக்கு வந்தியதேவனை புரிந்துகொள்ள உதவியாக இருந்தது.
மேலும், ஒரு நாவலை படமாக்குவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால், இந்த நாவலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதலிருக்கும். குறைந்தது 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்த புத்தகத்தை படித்திருப்பார்கள். அனைவருக்கும் ஏற்றவாறு மணி சார் இந்த படத்தை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்” என்று நெகிழ்ந்து பேசினார்.