பாடுவதற்கு வாய்ப்புகள் வரவில்லை என்று எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகனான எஸ்.பி.பி.சரண் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். சில படங்களில் நடித்துள்ளார். தயாரிக்கவும் செய்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாக உள்ள சீதா ராமம் படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார்.
எஸ்.பி.பி.சரண் ஐதராபாத்தில் அளித்த பேட்டியில், ”மெலோடி பாடல்களை மட்டுமே மக்கள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொள்கின்றனர். ஸ்பீட் பீட் பாடல்களை சினிமா ரிலீஸாகும்போது ரசித்து விட்டு பிறகு மறந்து விடுகின்றனர். நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இருக்கிறேன். ஒரு காலத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வந்தன. நான் பாடிய படங்களும் நல்ல ஹிட் ஆனது. ரசிகர்களும் நன்றாகவே ஆதரித்தனர். ஆனால் அதன் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. அது ஏன் என்று தெரியாது. என்னால் பாட முடியாது என்று எப்போதும் கூறியது இல்லை. அழைப்பு வந்தால் உடனே ரெக்கார்டிங்குக்கு வந்து விடுவேன். இருந்தாலும் எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. தமிழில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன்” என்றார்.