புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இதனையொட்டி பாராளுமன்றத்தில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் கூடுகிறது. வேட்புமனுத் தாக்களுக்களுக்காக மாத்திரமே பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இதன் போது தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் செயற்படுவதோடு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்பட இருப்பதாக அறிய வருகிறது.
புதிய ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்க தயாராக இருக்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே கட்சிகளிடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதோடு நேற்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளிடையேயும் சிறுபான்மை கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.இது தவிர போராட்டக்காரர்களுக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. உடன்பாடு எட்டப்படும் நிலையில் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் வேட்புமனுத் தாக்கல் செய்யாது விலகலாமென அறிய வருகிறது.இது தவிர இதுவரை போட்டியிடுவதாக அறிவிக்காத ஓரிருவர் வேட்புமனு தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்து காணப்படுவதோடு பொதுஜன பெரமுன எம்.பியான டளஸ் அழகப்பெருமவும் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதாக சில பொ.ஜ.பெரமுன எம்.பிக்கள் அறிவித்துள்ளனர். சுயாதீனமாக செயற்படும் கட்சிகளும் அவருக்கு ஆதரவு வழங்கலாமென அறிய வருவதோடு ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற அவரது தரப்பு பேச்சு நடத்தி வருகிறது. தமது கட்சி டளஸ் அழகப்பெரும எம்.பியை ஆதரிக்குமென வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். இது தவிர ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அதனோடு இணைந்த கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.எதிரணியிலுள்ள மலையக கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவருக்கு ஆதரவு வழங்க இருப்பதாக அறிய வருவதோடு சுயாதீனமாக செயற்படும் ஆளும் தரப்பு குழு மற்றும் எதிரணியிலுள்ள சிறுகட்சிகளின் ஆதரவை பெற ஐ.ம.ச பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில், கட்சிகளிடையே பொது உடன்பாடு ஏற்படாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதென்று அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியிலுள்ள சிலர் பதில் பிரதமரை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் அறிய வருகிறது.தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயாக்கவும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதோடு பொதுஉடன்பாடு ஏற்பாட்டால் போட்டியிடாது ஒதுங்குவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது கட்சியுடனும் எதிரணியிலுள்ள கட்சிகள் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பதில் ஜனாதிபதியை நாட்டின் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராகவும் நியமிப்பதற்கு இரு தரப்பினருக்குமிடையில் உடன்பாடு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நம்பகராக அறிய வருகிறது. ஆனால் இதற்கு ஐ.ம.ச தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.இது தவிர பொதுஜன பெரமுன எம்.பியான டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாகவும் சஜித் பிரேமதாஸவை பிரதமராகவும் நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் போட்டியின்றி உடன்பாட்டுடன் புதிய ஜனாதிபதி தெரிவாக வேண்டுமென சிவில் சமூகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டு நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பரவலாக கோரப்பட்டு வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இதுவரை எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவில்லையென நேற்று தெரிவித்தன.