அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் 10 நாட்களுக்கு பின் அகற்றப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார்.
பின்னர் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கட்சி அலுவலகத்திற்க்குள் ஈபிஎஸ் தரப்பினர் உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தரை தளத்தில் இருக்கக்கூடிய துணை பொதுச்செயலாளருக்கான அறை, கொள்கை பரப்பு செயலாளருக்கான அறை, அவைத்தலைவருக்கான அறை முழுவதும் சூறையாடப்பட்டிருந்தது. அறையின் கதவு, ஜன்னல், நாற்காலி, ஆவணங்கள், னைத்து அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் இருக்கக்கூடிய கணிணி அறை முழுவதும் சூறையாடப்பட்டிருக்கிறது. அலுவலகம் முழுவதும் உடைந்த பொருட்களாகவே காட்சி அளிக்கிறது. கிழிக்கப்பட்ட பேனர், உடைந்த பொருட்களை அகற்றும் பணியில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை எனவும் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை எனவும் அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் புகார் கொடுக்க ஈ.பி.எஸ். தரப்பு முடிவு செய்துள்ளனர்.