கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், இப்பயணம் போப்பின் வழக்கமான பயணமாக அமையாமல், கனடாவின் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய குற்றத்திற்கும்,பாலியல் துன்புறுத்தலுக்கும் போப் பிரான்சிஸ் என்ன பதில் அளிக்கப் போகிறார் என உலக நாடுகள் வியந்து நோக்கி கொண்டிருந்தன.
இந்தச் சூழலில், கனாடாவின் மாஸ்வாசிஸ் நகரில், திங்கட்கிழமை கனடாவின் பழங்குடி மக்கள் சூழ்ந்திருக்க நடந்த நிகழ்வில் போப் பிரான்சிஸ் பேசியது: “மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பைக் கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடிகளின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூரத் தீமைகளுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மன்னிப்பு பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளைக் கண்டறிவதற்கான விசாரணையை தீவிரப்படுத்தவும், கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடி மக்களுக்கு சிறு மருத்தாகவும் உதவும்” என போப் பிரான்சிஸ் பேசினார்.