தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு 1,262 இணையதளங்களுக்கும் இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.