அனுராதபுரம் மாநகர சபை ஊழியர்களின் அழுகிய முட்டை தாக்குதல் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் மொட்டு கட்சியின் உறுப்பினர் திருமதி சுரங்கி ரேணுகா சமரதுங்க இன்று பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (26ம் திகதி) மாநகர சபையின் மேயர் எச்.பி.சோமதாச தலைமையில் நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்கவுடன் குறித்த மொட்டு கட்சி உறுப்பினர் முறுகலில் ஈடுபட்டதுடன், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டி பாதணியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்று (27ம் திகதி) காலை மாநகர சபைக்கு வந்த குறித்த பெண் உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த போது, மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், அவரை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் அலுவலகத்தில்தொடர்ந்து இருந்ததால் , ஊழியர்கள் கோபமடைந்ததுடன் குறித்த அவரை அமர்ந்திருந்த நாற்காலியுடன் தூக்கிகொண்டு கீழ் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியிருந்தது.
மாநகர சபையின் நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய ஊழியர்கள் மொட்டு கட்சியின் குறித்த பெண் உறுப்பினருக்கு எதிராக பல்வேறு சுவரொட்டிகளைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது குறித்த பெண் உறுப்பினர் மாநகர சபை உழியர்கள் தன்னை தாக்கியதாக அழுது புலம்பியுள்ளார். ஆனால் ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன் அவர் மீது அழுகிய முட்டைகளால் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதற்கு மேலாக மாநகர ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஆணையளரிடம், குறித்த பெண் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊழியர்கள் கோஷமிட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு நிலமை மோசமாக குறித்த பெண் உறுப்பினர் ஆணையாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவர் மீது ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் அநுராதபுரம் போலீஸ் நிலைய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாநகர சபைக்கு விரைந்து குறித்த பெண் உறுப்பினரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.