ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று தனது படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் டாம் வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி அதனை தனது படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவாறு, சமூக வலைத்தளத்தில் காணொளியொன்றை குறித்த நபர் பகிர்ந்திருந்தார்.
குறித்த காணொளியில், தான் ஜனாதிபதியின் கொடியை எடுத்து வந்துள்ளதாகவும், ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதோடு, தற்போது இந்த கொடியை தான் தனது கட்டிலின் விரிப்பாக பயன்படுத்துவதாகவும், இதனை அதிக நேரத்திற்கு வைத்திருக்கப் போவதில்லையெனவும், அதனை எரிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
54 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடமிருந்து கொடியை பொலிஸார் மீட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அண்மையில் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை ‘அதிமேதகு’ என அழைப்பதையும், ‘ஜனாதிபதி கொடி’ யினை நீக்கவும் உத்தரவிட்டிருந்தார்.