ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொது
மக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 14, மல் மாவத்தையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் அங்கு காணப்பட்ட பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒருவரே இவர் என்பதும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை சிலர் எண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
—–
ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணம் நேற்று (29) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு மத்தி வலய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தினால் இந்த பணம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது. ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் , போராட்டக்காரர்களால், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எண்ணி ஒப்படைக்கும் வீடியோ காணொளியை மையப்படுத்தி, அக்காணொளியில் இருந்த நால்வர், கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகளால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நேற்று முன்தினம் (28) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவர்களுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்னவின் வாதங்களையடுத்து கோட்டை நீதிவான் இந்த பணத்தொகையை நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்தே நேற்று அப்பணம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது, போராட்டக்காரர்கள் பணத்தை கையளித்து 3 வாரங்களுக்கு மேல் காலம் கடந்த போதும், அதனை நீதிமன்றில் ஒப்படைக்க கால தாமதமதமானது ஏன், அது தொடர்பில் நீதிமன்றுக்கு ஒரு அறிக்கையை கூட தாக்கல் செய்யாதது ஏன் என்பனவற்றை உள்ளடக்கி நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு வலய குற்ற விசாரணை பணியக பணிப்பாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.